மாட்டு சந்தையில் அடிப்படை வசதி செய்ய வேண்டும்

திருப்பூர், ஜன. 21: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.  கால்நடை வியாபாரிகள் அளித்த மனு: திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை கால்நடை சந்தை நடக்கிறது. அங்கு, சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் விவசாயிகள், வியாபாரிகள் கால்நடைகளை வாங்கவும், விற்கவும் வருகின்றனர். சரியான அடிப்படை வசதியில்லாததால் பல்லடம் - ஏ.பி.டி ரோட்டில் கால்நடைகளுடன் சுமார் 7 மணி நேரமாக காத்திருந்த பின்னரே சந்தைக்குள் நுழைய முடிகிறது. அதோடு அங்கு தினசரி காய்கறி சந்தையும் நடந்து வருவதால், வாகன நெரிசல், மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கிறது. விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள், எருமைகள் நீண்ட நேரம் வெயிலில் குடிக்க தண்ணீர் கூட இன்றி வாகனங்களில் காய்கின்றது. மேலும் கால்நடை சந்தையில் கால்நடைகளுக்கு தண்ணீர் வசதியும் இல்லை. கால்நடை இறக்கி ஏற்றுவதற்கு எந்த வசதியும் இல்லை. மேலும் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை. எனவே, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

 ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை: திருப்பூர், தெற்கு வட்டம், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். திருப்பூர்-தாராபுரம் மெயின் ரோட்டில் நுழைவு முகப்பு உள்ளதால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. அப்போது பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது. எனவே, பள்ளி குழந்தைகள் நலன் கருதி பள்ளியின் முன்பு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென மனுவில் கூறியுள்ளனர்.  திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம்: திருப்பூர் மாவட்டம் உதயமான போது கோவை தெற்கு மற்றும் வடக்கு ஈரோடு ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் இருந்து திருப்பூர் மின் பகிர்மான வட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட குன்னத்தூர் உபகோட்ட மின்வாரிய அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள் திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் இணைக்கப்படாமல் உள்ளதால், ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று வர வேண்டியுள்ளது. எனவே ஈரோடு வட்டத்தில் உள்ள குன்னத்தூர் உபகோட்ட மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துடன் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

 அவிநாசி தாலுகா சூரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன்: தெக்கலூர் கிராமம் சூரியபாளையத்தில் 3.70 சென்ட் மானாவாரி நிலம் எனக்கு உள்ளது. இதில் சிலர் போலி ஆவணம் தயார் செய்து ஆள்மாறாட்டம் மூலம் எனது நிலத்தை அபகரித்து உள்ளனர். இது தொடர்பாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தும் பதிவுத்துறை துணைத்தலைவர் விசாரணை செய்த ஆவணங்களை போலி என உறுதிப்படுத்தி இறுதியாணை வழங்கினார். இந்த இறுதி ஆணையின்படி போலி ஆவணங்களை அகற்ற புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மிகுந்த சிரமத்தில் இருந்து வருகிறேன். எனவே தயவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து அவிநாசி சார்பதிவு அலுவலகத்திலுள்ள போலி ஆவணங்களை நீக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் போலி ஆவணம் மோசடி செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் நஷ்ட ஈடு பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வாடகை கார் ஓட்டுனர்கள்: திருப்பூர் மாவட்டத்தில் வாடகை கார் தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளது. ஆனால் சமீபகாலமாக ஒரு சிலர் தங்களது சொந்த வாகனங்களை விதிமுறைக்கு மாறாக வாடகைக்கு ஓட்டி வருகின்றனர். இதன் காரணமாக வாடகை கார் ஓட்டும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: