×

குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தவர் மீது புகார்

திருப்பூர், ஜன. 21: திருப்பூரில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மங்கலம், சுல்தான்பேட்டை பொதுமக்கள் நேற்று மாவட்ட எஸ்பி. அலுவலகத்தில் மனு அளித்தனர்.  திருப்பூர் மங்கலம், சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் தனித்தனியாக எஸ்பி.யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவர் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் அரசு பணியில் இருப்பதால், இந்திய பட்டதாரி கூட்டமைப்பு மூலமாக குறைந்த வட்டிக்கு ரூ.6 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக கூறி அதற்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டுமென கூறினார்.
அதனை நம்பி எங்கள் பகுதியை சேர்ந்த பலர் பணம் கொடுத்தோம். மீண்டும் 2 நாட்கள் கழித்து வங்கி கடன் வேண்டுமென்றால் மேலும் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டுமென கூறினார். அதனையும் நம்பி மேலும் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் கொடுத்தோம். அதன் பின்னர் வங்கியில் கேட்பதாக கூறி எங்களிடம் நிரப்பப்படாத ரூ.20 ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு மீண்டும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால்தான் குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக முருகேசன் கூறினார்.

 இதையடுத்து நாங்கள் மீண்டும் ரூ.50 ஆயிரம் கொடுக்க முடியாது என கூறி ஏற்கனவே கொடுத்த ரூ.30 ஆயிரத்தை திரும்ப தருமாறு கேட்டோம். அதற்கு அவர் பணத்தை கேட்டால் நிரப்பப்படாத ஸ்டாம் பேப்பரில் கடன் வாங்கியதுபோல எழுதி விடுவேன் என கூறி மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களிடம் மோசடியாக செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். மனு அளிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகம் வந்திருந்தனர்

Tags : millions ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...