கால்நடை மருத்துவர் தாமதமாக வந்ததால் இலவச ஆடுகளை பெற வந்த பயனாளிகள் பரிதவிப்பு

உடுமலை, ஜன. 21: உடுமலையில் கால்நடை மருத்துவர் சந்தைக்கு தாமதமாக வந்ததால்இலவச ஆடுகளை பெற வந்த பயனாளிகள் மிகுந்த அவதியடைந்தனர்.உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜல்லிப்பட்டியில் நேற்று தமிழக அரசு சார்பில் இலவச ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் 300 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கிராமங்கள்தோறும் ஏழை, எளிய பெண்கள் வாழ்வில் முன்னேறுவதற்காக இலவச ஆடு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் ஆடு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் சந்தைகளுக்கு சென்று நான்கு ஆடுகளை வாங்கிய பிறகு ஆடுகளுக்கான தொகையை கால்நடை மருத்துவர் வழங்குவது வழக்கம். நேற்று காலை சந்தை துவங்கிய போது 300 பயனாளிகளும் தலா நான்கு ஆடுகளை வாங்கி அவற்றை விற்ற வியாபாரிகளுக்கு உடுமலை வாரச்சந்தையில் 4 ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பயனாளிகளுக்கு கொட்டகை அமைக்க ரூ.2,500 வழங்கப்படும். இதில் பயனாளிகளுக்கு உரிய தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.

 இத்திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அம்மாபட்டி வெங்கடாபுரம் திணை குளம் என 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஆடுகளை வாங்குவதற்காக நேற்று காலை 6 மணி அளவில் உடுமலை சந்தைக்கு வந்தனர். காலை 8 மணி அளவில் எல்ல ஆடுகளை பயனாளிகள் கொள்முதல் செய்த பின்னரும் கால்நடை மருத்துவர் வியாபாரிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு வரவில்லை. காலை உணவு, மதிய உணவு, குடிநீர் வசதி எதுவும் இன்றி பயனாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் ஆடுகளும் தண்ணீர் இன்றி மயக்க நிலைக்கு சென்றன. பிற்பகல் 3.30 மணியளவில் கால்நடை மருத்துவர் சந்தைக்கு வந்து பயனாளிகளுக்கு உரிய பணப்பட்டுவாடா துவங்கினார். பயனாளிகளின் பெயர், ஊர், வங்கி கணக்கு எண் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பணப்பட்டுவாடா செய்த போது வியாபாரிகள் இடையே பணத்தைப் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதனால் இலவச ஆடு பெற வந்த பயனாளிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

Related Stories: