×

மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல் பள்ளிகளில் நேரலை ஒலிபரப்பு

கோவை, ஜன. 21: அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள ஊக்கம் அளிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல்  நடத்தி வருகிறார். அதன்படி, இந்த ஆண்டு மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டெல்லி தல்கோத்ரா விளையாட்டு மைதானத்தில் இருந்து பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்து பேசினார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. இளைஞர்கள் நல்ல மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும். நல்ல கருத்துகளை வெளியிட வேண்டும். மதிப்பெண்ணை நினைத்து மன அழுத்தத்தில் ஆழ்ந்து விடக்கூடாது. ஒவ்வொரு தோல்வியில் இருந்து புதிய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப அறிவை வளர்த்துகொள்ள வேண்டும். அடிப்படை கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

இதனை கோவையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, சுமார் 150 பள்ளிகளில் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் இந்தி மொழியில்தான் அதிகளவில் பேசினார். இதனால், அவரின் உரையை தமிழக அரசு பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க பள்ளியில் மாணவிகளுக்கு பெரிய திரையில் பிரதமரின் நிகழ்ச்சி நேரலையில் காண்பிக்கப்பட்டது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கலந்துகொண்டார். இந்தி  தெரிந்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பிரதமர் பேசியதை மொழிமாற்றம் செய்து விளக்கினார். இதேபோல் பல பள்ளிகளில் இந்தி தெரிந்த ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், “பிரதமரின் நிகழ்ச்சியை மாணவர்கள் பள்ளிகளில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. சில பள்ளிகளில் இந்தி தெரிந்த ஆசிரியர்கள் உதவியுடன் பிரதமரின் உரை மொழிமாற்றம் செய்யப்பட்டது. மேலும், நாளை (இன்று) பிரதமரின் முழு உரையை மொழிமாற்றம் செய்து பள்ளிகளில் காலை வழிபாட்டு நிகழ்ச்சியின்போது மாணவர்களுக்கு எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.


Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை