ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு தண்ணீர் வெள்ளோட்டம்

ஈரோடு, ஜன.21:ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் 9 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம்  தினமும் காவிரி ஆற்றில் இருந்து 54 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு பம்பிங் ஸ்டேஷன்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி விரிவுப்படுத்தப்பட்டு 60 வார்டுகளை கொண்டுள்ள நிலையில் அனைத்து பகுதி மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.484.45 கோடி மதிப்பீட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, பவானி அருகே வரதநல்லூரில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அவற்றை சுத்தப்படுத்த 2 ஏர்லேட்டர், அழுக்கு நீக்க தொட்டி, 38 பில்டர் பெட், 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடீநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதுதவிர, தண்ணீரை பிரித்து வழங்கும் வகையில் சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொண்ட குடிநீர் தொட்டியும், ஈரோடு வ.உ.சி.பூங்காவில் 1.14 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி பகுதியில் 21 மேல்நிலை தொட்டிகளும், 46 பழைய குடிநீர் தொட்டிகள் மூலம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக, வரதநல்லூரில் இருந்து பவானி, ஆர்.என்.புதூர், பெரியஅக்ரஹாரம் வழியாக ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள ராட்சத தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தற்போது, இந்த திட்டம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் முதல்கட்டமாக 3 பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிக்கான வெள்ளோட்டம் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு அதன்பின், முறையாக திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:

மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்களிப்பு 50 சதவீதம், மாநில அரசின் பங்களிப்பு 20 சதவீதம், உள்ளாட்சி அமைப்பின் பங்களிப்பு 30 சதவீதம் என இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரதநல்லூர் என்ற இடத்தில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு அங்கிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக, வரதநல்லூரில் இருந்து 720 கி.மீட்டருக்கு குழாய்கள் போடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சிக்கு வரி செலுத்தும் அனைத்து வீடுகளுக்கும் மாநகராட்சி செலவிலேயே இந்த குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த திட்டம் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் சூரியம்பாளையம் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து கே.கே.புதூர், இந்திராபுரம், மரவாபாளையம் ஆகிய 3 ஊர்களில் உள்ள 1,600 வீடுகளுக்கு வெள்ளோட்டமாக தண்ணீர் விநியோகம் தொடங்கி உள்ளது. இதில், தண்ணீர் செல்லும் குழாய்கள் பிரசர் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கும் வெள்ளோட்டம் நடத்தப்பட்டு முறைப்படி இந்த திட்டம் தொடங்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: