9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நாளை துவக்கம்

ஈரோ டு, ஜன.21: ஈரோடு மாவட்டத்தில் 186 அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு உள்ளிட்ட ஆப்டிடியூட் தேர்வு முதல்முறையாக ஆன்லைனில் தேர்வு நாளை (ஜன.22ம் தேதி) துவங்குகிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தின்கீழ், 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாட அறிவினை தாண்டி, எந்த துறையில் மேலோங்கி உள்ளனர் என்பதை கண்டறியவும், போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையிலும் ஆப்டிடியூட் தேர்வு முதல்முறையாக அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. ஈரோடு  மாவட்டத்தில் இந்த தேர்வு வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.
Advertising
Advertising

இதில், நேற்று ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆப்டிடியூட் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் நடந்தது.  இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி அலுவலர் கலைச்செல்வி கூறியதாவது: ஆப்டிடியூட் தேர்வு முதல் முறையாக அரசு பள்ளிகளில் ஆன்லைன் மூலம் நடக்கிறது.

இதற்காக, மாவட்டத்தில் 106 மேல்நிலை பள்ளிகளுக்கு அரசு தலா 20 கம்ப்யூட்டர்களும், 80 உயர்நிலை பள்ளிகளுக்கு தலா 10 கம்ப்யூட்டர்களும் என 186 பள்ளிகளுக்கு வழங்கி உள்ளது. இத்தேர்வுக்கான மாதிரி தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது முதற்கட்டமாக 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் நாளை (22ம் தேதி) முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்க உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 4 பிரிவாகவும், 6 பிரிவாகவும் பிரித்து காலை, மதியம் என இருவேளையும் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 90 மதிப்பெண்களுக்கு, வினா மற்றும் அதன் கீழே நான்கு விடைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் அதில் சரியான விடை தேர்வு செய்தால் போதும். தேர்வு ஒன்றரை மணி நேரம் நடக்கும். இணையதள வேகம் இல்லாத பள்ளிகளில் தேர்வு நேரம் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கூடுதலாக கொடுக்கப்படும். 10ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் பிப்ரவரி மாதத்தில் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் இதேபோல் தேர்வு நடத்தப்படும். இது மாணவர்களுக்கான போட்டி தேர்வு அல்ல, திறனறிதல் தேர்வு மட்டுமே.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: