வாகன சோதனையின்போது காரை நிறுத்தாமல் ஓட்டி சென்ற டிரைவர், 40 நாட்களுக்கு பிறகு கைது

கும்பகோணம், ஜன. 21: கும்பகோணம் அருகே வாகன சோதனையின்போது காரை நிறுத்தாமல் ஓட்டி சென்ற டிரைவரை 40 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே பட்டம் சாலையில் வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் கடந்த டிசம்பர் 10ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை அதன் டிரைவர் நிறுத்தாமல் ஓட்டி சென்றார். இதையடுத்து அந்த காரை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். இதனால் ஒலி எழுப்பியவாறு அந்த காரை அதன் டிரைவர் வேகமாக சாலையில் ஓட்டி சென்றார். இதனால் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் பதறியடித்து ஓடினர். மேலும் சாலையின் இருபுறமும் நிறுத்தியிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகளை இடித்து தள்ளியவாறு பந்தநல்லூர் கடைத்தெரு அருகில் சென்ற அந்த கார் மோதியதில் 2 பேர் காயமடைந்தனர்.

இருப்பினும் அந்த காரை டிரைவர் நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக ஓட்டி சென்றதால் போலீசாருடன் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலரும் விரட்டி சென்றனர். அப்போது அரசரடி பகுதியில் காரை நிறுத்தி விட்டு ஆற்றில் குதித்து தப்பிப்பதற்காக பெட்ரோல் பங்க் சுவரை தாண்டி குதித்து டிரைவர் தப்பியோடினார். அப்போது டிரைவர் விட்டு சென்ற செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த காரில் போலீசார் சோதனை செய்தபோது அதில் 2,112 வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை, கும்பகோணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாக தப்பியோடிய டிரைவர் மற்றும் அவரது உரிமையாளரை ரகிசயமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று அதிகாலை தலைமறைவாக இருந்த டிரைவர் அவரது வீட்டுக்கு வந்துள்ளார் என மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், வீட்டில் பதுங்கியிருந்த டிரைவரான காரைக்கால் வழிச்சக்குடியை சேர்ந்த சண்முகம் (எ) மாங்காய் சண்முகம் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான காரின் உரிமையாளர் பாம்ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: