வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் நெல் அறுவடை இயந்திரங்களை வரவழைக்க வேண்டும்

தஞ்சை, ஜன. 21: கூடுதல் நெல் அறுவடை இயந்திரங்களை வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்க வேண்டுமென விவசாயிகள் மனு அளித்தனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில், தஞ்சை மாவட்டத்தில் 1.35 லட்சம் எக்டேரில் நெல் பயிரிடப்பட்டு ஒரு லட்சத்துக்கு மேல் அறுவடைக்கு தயாராக உள்ளது. குறிப்பாக அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, தஞ்சை, பாபநாசம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. ஏற்கனவே அவ்வபோது பெய்த மழையால் தூர்க்கட்டுடன் வளர வேண்டிய நெற்பயிர்கள் நெடு நெடுவென வளர்ந்த நிலையில் புகையான் நோய் தாக்குதல், ஆணைக்கொம்பன் நோய் தாக்குதல், பூ உதிர்தல் ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உருவானது. மேலும் புகையான் நோய் தாக்குதல், கூடுதல் உயரம் வளர்ச்சி காரணமாக கோ-50, 1009 ஆகிய நெல் ரகங்கள் பெரும்பாலும் சாய்ந்து வயலில் மண்ணோடு நெற்கதிர்கள் கிடக்கின்றன.

பொங்கல் பண்டிகை மற்றும் நெல் அறுவடை இயந்திரம் கிடைக்காமல் அறுவடை பணிகள் பாதித்தது. இந்நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நெற்கதிர்கள் மண்ணுடன் கலந்து முளைக்கும் தருவாயில் காணப்படுகிறது. எனவே உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டும். அத்துடன் பயிர் காப்பீட்டுக்கான மகசூல் இழப்பீடும் கணக்கிடும் பணியில் விவசாயிகளின் பாதிப்பை கவனத்தில் கொண்டு நடத்த வேண்டும். நெல் அறுவடை இயந்திரத்துக்கு மாவட்ட நிர்வாகமும், வேளாண் பொறியியல் துறையும் நிர்ணயித்த செயின் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.2 ஆயிரம், டயர் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.1500 என்ற வாடகையை மட்டும் விவசாயிகளிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் தேவையான அளவு அறுவடை இயந்திரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால் மகசூல் இழப்பும் கூடுதல் தொகை செலவும் விவசாயிகளுக்கு ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் கூடுதல் அறுவடை இயந்திரங்களை வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மழையை காரணம் காட்டி நெல் கொள்முதலில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை களைய வேண்டும். தேவையான சாக்கு மற்றும் தார்பாய் இருப்பதோடு தினமும் ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் கொள்முதலை மறுக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருநதது.

கும்பகோணம் தாராசுரம் எலுமிச்சங்காபாளையம் மணல் வண்டி கூலி தொழிலாளர் நல சங்க தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட மணல் வண்டி தொழிலாளர்கள் அளித்த மனுவில், எங்களது சங்கத்தில் மொத்தம் 623 உறுப்பினர்கள் உள்ளனர்.

நாங்கள் பல ஆண்டுகளாக மாட்டுவண்டி மூலம் கொத்தங்குடி மற்றும் நீலத்தநல்லூர் அரசு குவாரியில் மணல் ஏற்றி வந்தோம். இந்திய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மதிக்கும் வகையில் மணல் ஏற்றாமல் வேலை ஏதுமின்றி வறுமையில் வாடி வருகிறோம். இதையடுத்து கனிம வளத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவை மூலம் உரிய அனுமதி பெறவும், சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து தடையின்றி சான்று பெறவும் விண்ணப்பித்து விண்ணப்ப மூப்பு அடிப்படையில் காத்துள்ளோம். இந்நிலையில் மிக குறுகிய காலத்தில் விண்ணப்பித்த 288 பேருக்கு கொத்தங்குடி குவாரியில் இன்று (20ம் தேதி) முதல் மணல் ஏற்றுவதற்கு மாட்டு வண்டிகளுக்கு அனுமதிவில்லை ஒட்டப்பட்டு வருகிறது. ஆனால் நெடுநாட்களாக பதிவு செய்து காத்திருக்கும் எங்களது சங்க உறுப்பினர்களுக்கு இன்னும் அனுமதி உத்தரவு கிடைக்கவில்லை. இதனால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் சட்டத்தை மதித்து நடக்க தயாராக உள்ளோம். எங்களுக்கும் உடனடியாக மணல் அனுமதி வில்லை வழங்க வேண்டும். இதன் மூலம் எங்களின் வாழ்வாதாரம் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: