×

குளித்தலை சுங்ககேட் முசிறி பெரியார் பாலம் அருகில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணியர் நிழற்குடை

குளித்தலை, ஜன. 21: கரூர் மாவட்டம் குளித்தலை முசிறி பெரியார் பாலம் அருகே உள்ளது சுங்க கேட் பகுதி. இப்பகுதி வழியாக பெங்களூரு, ஓசூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அனைத்து வாகனங்களும் தினந்தோறும் வந்து செல்கின்றன. அதேபோல் கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், குளித்தலை வழியாக முசிறி, துறையூர், பெரம்பலூர் செல்லும் வாகனங்களும் இவ்வழியாக வந்து செல்கின்றன. மேலும் திண்டுக்கல், மணப்பாறை, மதுரை, தரகம்பட்டி, பாளையம், கடவூர் ஆகிய மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இந்த சுங்க கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் இந்த சுங்க கேட் வழியாக வந்து மற்ற வழித்தடங்கள் மாற வேண்டும். இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குளித்தலை சுங்க கேட் வழியாக வந்து செல்கின்றன. குளித்தலை சுங்க கேட் அருகே முசிறி பெரியார் பாலம் செல்லும் வழியில் தென்கரை வாய்க்காலில் உள்ள பாலத்தில் முசிறி செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கின்றன.

இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அனைத்து வழித்தடத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. குளித்தலை சுங்க கேட் பகுதியிலிருந்து முசிறி செல்லும் வழியில் ஒரு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு தற்போது பயன்பாடற்ற நிலையில் குடிமகன்களின் கூடாரமாக இருந்து வருகிறது. இந்த பயணியர் நிழற்குடை பகுதியில் நிரந்தரமாக குளித்தலையில் இருந்து முசிறி செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லவும், அப்பகுதியில் மின்விளக்கு வசதி நகராட்சி மூலம் ஏற்படுத்திக் கொடுக்கவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Sunkagate Muskiri Periyar Bridge ,
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்