×

குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படுமா?

கரூர், ஜன. 21: குற்றத்தடுப்பு ரோந்து பணிகளை காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் கரூர் பகுதி ஜவுளி நிறுவனங்கள், கொசுவலைக்கூடங்கள், பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்கள் நிறைந்த பகுதி. வர்த்தகம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் மற்றும் பணப்புழக்கம் அதிகமாக உள்ளதாக இப்பகுதி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக பணம் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை உட்கோட்டங்கள் உள்ளன. இவைகளில் கரூர் உட்கோட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

முன்பு காவல்துறையில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக சிறப்பு வாகன ரோந்துப்படை, சிறப்பு இருசக்கர வாகன ரோந்து படையினர் செயல்பட்டு வந்தனர். இதற்காக போலீசாருக்கு இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்பட்டன. அந்த ரோந்துப்படை இப்போது செயல்பாடு இன்றி உள்ளது.
நகர பகுதிகளில் ஆங்காங்கே புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய புறக்காவல் நிலையங்கள் செயல்படவில்லை. ஒருசில இடங்களில் போலீசார் வந்தாலும் தங்களது செல்போண் எண்களை அளிப்பதில்லை. முன்பெல்லாம் அருகாமையில் வசிப்போரிடம் பழகி சோர்ஸ் வைத்துக்கொண்டு உடனுக்குடன் தகவல்களை பெற்று வந்த முறை பின்பற்றப்படுவதில்லை.

மேலும் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும் வாகன தணிக்கையும் ஹெல்மெட் மற்றும் குடிபோதை போன்ற வழக்குகளுக்காகவே நடத்தப்படுகிறது. அதுஒருபுறம் இருந்தாலும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் இந்த தணிக்கையை மாற்ற வேண்டும். குற்றத்தடுப்பு, கண்காணிப்பு என்ற ரீதியில் ரோந்து பணிகளை மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : police patrols ,
× RELATED போலீசார் ரோந்து வந்ததால்...