×

லைசென்ஸ் பெற்று கார், பைக் ஓட்ட வேண்டும்

சின்னசேலம், ஜன. 21: மாணவர்களும், இளைஞர்களும் லைசென்ஸ் பெற்ற பிறகே கார், பைக் ஓட்ட வேண்டும் என்று கனியாமூரில் நடந்த சாலை விழிப்புணர்வு கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சுதாகர் அறிவுரை வழங்கினார். சின்னசேலம் அருகே கனியாமூர் நான்கு முணை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை அந்த இடத்தில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் தேவையான இடங்களில் தடுப்பு கட்டைகளை வைத்தனர். பின்னர் கார் போன்ற வாகனங்கள் நான்குமுனை சந்திப்பு போன்ற இடங்களில் வேகத்தை குறைத்து செல்ல போலீசார் அறிவுரை வழங்கினர். அதைப்போல கார் டிரைவர்களை நிறுத்தி, செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலை விதிகளை கடைபிடித்து நிதானமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றார்.

பின்னர் கனியாமூர் நான்குமுனை சந்திப்பில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் அங்கு நின்றிருந்த பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களை அழைத்து போக்குவரத்து விதிமுறைகளை தெளிவாக கூறி அதை நீங்கள் கடைபிடித்தால் விபத்து ஏற்படுவது குறைந்து விடும் என்றார். அரசும் நீங்கள் விழப்புணர்வு பெற வேண்டும் என்பதால் இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்கு சாலை போக்குவரத்து வார விழா நடத்துகிறது. மேலும் மாணவர்கள் சிறுவயதில் பைக் ஓட்ட ஆசைப்படக்கூடாது. அதனால் உங்களுக்கும், உங்கள் குடுமபத்திற்கும் பேரிழப்பு ஏற்படும்.

முறையாக லைசென்ஸ் பெற்ற பிறகு கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்ட வேண்டும். அப்போதும் பைக் ஓட்டும்போது தலைக்கவசமும், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிந்தும் ஓட்ட வேண்டும். என்று அறிவுரை வழங்கினார். அதைப்போல மாணவர்கள் சாலையின் இரு புறமும் பார்த்த பிறகே கடக்க வேண்டும். வளைவான இடங்களில் சாலையை கடக்க கூடாது. மாணவர்கள் பைக்கை அதிவேகமாக ஓட்டாமல், இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இதில் சக்தி பள்ளி சேர்மன் ரவிக்குமார், நெடுஞ்சாலை ரோந்து ஏட்டு துரை, காவலர் ராம்குமார், விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விராலிமலை அருகே பைக் மீது கார் மோதி விவசாயி பலி