ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் தினசரி காய்கறி மார்க்கெட்

கள்ளக்குறிச்சி, ஜன. 21: கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள காய்கறி மார்க்கெட் ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்து வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகராட்சி தினசரி நேரு காய்கறி மார்க்கெட் கடந்து 30 ஆண்டுகளாக சேலம் மெயின்ரோடு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் நகராட்சி நிர்வாகம் ஷெட்டர் அமைத்து 108 கடைகளும் ஷெட்டர் இல்லாமல் தற்காலிகமாக சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காய்கறி மார்க்கெட்டில் நகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும்,  போக்குவரத்திற்கும் இடையூறாக 100க்கும் மேற்பட்ட கடைகள் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதனை அகற்றாமல் அதிகாரிகள் கண்டும், காணாமல் அலட்சியமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.      

தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுமார் 150 கடைகள் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சுமார் 150 கடைகள் மல்லிகை பொருட்கள், பழகடை, பூகடைகள் உள்ளிட்ட கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த 300 கடைகளும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கடை அமைத்து கொடுக்கபட்டுள்ளது. அதன்படி மாதந்தோறும் நகராட்சி நிர்வாகம் வாடகை வசூல் செய்து வருகின்றது. ஆனால் இந்த 300 கடைகளும் வாடகைக்கு விடப்பட்ட கடைகளில் காய்கறிகள், மல்லிகை பொருட்களை வைத்து விற்பனை செய்வது இல்லை. அனைத்து பொருட்களும் மக்கள் நடந்து செல்வதற்கு ஒதுக்கப்பட்ட சாலையை முழுமையாக ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் சிரமபடுகின்றனர். இதுமட்டும் இல்லாமல் நகராட்சி அனுமதியே பெறாமல் மார்க்கெட் நுழைவுவாயில் பகுதியில் 25க்கும் மேற்பட்ட பூக்கடை வியாபாரிகள் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் விதமாக வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த பூக்கடைகளால் நகராட்சிக்கு ஒரு ரூபாய் கூட வருவாய் ஏதும் இல்லை. தர வாடகை கட்டணம் ஒவ்வொரு கடைக்காரர்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 50 மட்டுமே செலுத்தி விட்டு  பூ கடை நடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் அதே பகுதியில் நகராட்சி நிர்வாகத்தால் கடைகள் ஏலம் விடப்பட்ட கடைகளுக்கு குறைந்தது ரூ. 5000 முதல் ரூ.7000, ரூ.8000வரை வாடகை செலுத்தி வியாபாரிகள் தொழில் செய்து வருகின்றனர்.

அதேசமயம் ஆக்கிரமிப்பு கடைகளால் நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டும் இல்லாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட் பகுதியில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் பொதுமக்கள் செல்வதற்கு போதுமான இடவசதி இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  நகராட்சி காய்கறி மார்க்கெட்டுக்கு கடைவீதி வழியாக செல்லும் சாலை பகுதியில் அக்கரகாரம் தெரு மற்றும் குளத்துமேட்டு தெரு அமைந்துள்ளது.  அப்பகுதியில்  குடியிருந்து வரும் மக்கள் 30 அடி சாலையை ஆக்கிரமித்து கடை அமைத்து வியாபாரம் செய்வதற்கு தனிநபர் தினசரி ஒரு கடைகளுக்கு ரூ. 200 வசூல் செய்து கொண்டு கடை அமைத்துகொள்ள அனுமதி அளித்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் விதமாக தேங்காய், காய்கறி, பழகடை ஆகியவை ஒரு சாலையில் ஆக்கிரமித்து கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். மற்றொரு சாலையில் கொடுவா, கத்தி, கடப்பாரை, மம்புட்டி உள்ளிட்ட இரும்பு பொருட்கள், காய்கறிகள் உள்பட 60க்கும் மேற்பட்ட கடைகள் சாலையை ஆக்கிரமித்து அமைத்து தொழில் செய்து வருகின்றனர்.  இதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் இந்த கடைகளால் அரசுக்கு வருவாய் ஏதும் இல்லை. மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே பொதுபாதையின் நடுவில் தள்ளுவண்டியில் போக்குவரத்திற்கு இடையூராக வியாபாரம் செய்து வருகின்றனர்.  பொதுமக்கள் காய்கறி மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க வருகின்றபோது மக்கள் கொண்டு வருகின்ற பைக் நிறுத்துவதற்கு கூட இடவசதி இல்லை. சாலையில் நடந்து செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் பகீரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே தினசரி காற்கறி மார்க்கெட்டில் நகராட்சி நிர்வாகத்தால் அனுமதி பெறப்பட்டு மாத வாடகை செலுத்தி வரும் கடைகள் சாலையை ஆக்கிரமிக்கபட்டுள்ளதை அகற்றிவிட்டு அந்தந்த கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதோடு நகராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் விதமாக அமைக்கபட்டுள்ள பூ, தேங்காய், பழம், இரும்பு பொருட்கள் வியாபார கடைகளை முழுமையாக அகற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சம்பந்தபட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: