பண்டரக்கோட்டை- தொரப்பாடி சாலை அமைக்கும் பணி துவக்கம்

பண்ருட்டி, ஜன. 21: பண்ருட்டி அருகே பண்டரகோட்டை, தொரப்பாடி கிராம இணைப்பு சாலை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இரு கிராம மக்களும் சேதமடைந்த இந்த சாலையின் வழியாகத்தான் சென்று வந்தனர். பள்ளி மாணவர்கள், விவசாயிகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 1.20 கி.மீ தூர சாலை ரூ.36.04 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதன் காரணமாக சாலை பணியை மேற்கொள்ள பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம், மேடுகள் சரிசெய்யப்பட்டு ஜல்லிகள் கொட்டப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலை பணி செய்வதில் பிரச்னை எழுந்தன.

இதனால் இரு கிராமத்தினர் பல கி.மீ சுற்றி வந்தனர். மக்கள் கடுமையாக அவதிப்படுவதை பல்வேறு தரப்பினர் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் வலியுறுத்தினர். உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் பணிகள் தொடர முடியாது என அறிவித்தனர். தற்போது தேர்தல் முடிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றனர். இந்நிலையில் நேற்று மீண்டும் சாலையில் ஜல்லிகள் கொட்டி சாலை அமைக்கும் பணி துவங்கியது.

Tags : Commencement ,road ,
× RELATED களக்காடு அருகே சாலை அமைக்கும் பணிகள் முடக்கம் விவசாயிகள் கடும் பாதிப்பு