×

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அரசு டவுன் பஸ்கள் வராததால் மாணவர்கள், பொதுமக்கள் தவிப்பு

பண்ருட்டி, ஜன. 21: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நேற்று அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள், பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள். இதையடுத்து தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் விடுமுறை மற்றும் அரசு விடுமுறை என மொத்தம் 8 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. மேலும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ, மாணவிகளும் நேற்று பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு வந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் கடலூர் செல்லும் அரசு டவுன் பஸ் எண் 17 தினமும் காலையில் புறப்படும். அதேபோல் பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் செல்லும் 2ம் எண் கொண்ட டவுன் பஸ்சும் காலையில் புறப்படும்.

நேற்று காலை பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு 2 டவுன் பஸ்களும் வராததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்துகள் வராததால் பஸ் நிலையத்தில் உள்ள நேரக்காப்பாளர் அறைக்கு சென்று புகார் அளித்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரி கூறுகையில், பொங்கல் விடுமுறை மற்றும் நேற்று முன்தினம் கண்டரக்கோட்டை மற்றும் பிடாகம் ஆகிய பகுதியில் ஆற்றுத் திருவிழாவுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் அந்த பேருந்துகளை இயக்கிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மீண்டும் பணிக்கு வரவில்லை. அதனால் பேருந்துகள் இயக்கவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வேறு வழியின்றி தனியார் பேருந்து மற்றும் ஆட்டோவில் ஏறி சென்றனர். அரசு டவுன் பஸ்கள் வராததால் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : bus stand ,Panruti ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை