×

இறால் பண்ணைகள் பதிவு செய்யாமல் நடத்தினால் 3 ஆண்டு ஜெயில் கலெக்டர் எச்சரிக்கை

நாகர்கோவில், ஜன.21: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச்சட்டம் 2005-ன் படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இறால் பண்ணைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் மூலம் பதிவு செய்யப்படாத இறால் பண்ணைகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச்சட்டம் (2005) அத்தியாயம்-4, பிரிவு-14-ன்படி, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

மேலும் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச்சட்டம் (2005), அத்தியாயம்-4, பிரிவு 2, துணைப்பிரிவு (1) உட்கூறு (டி) மற்றும், அத்தியாயம்-4, துணைப்பிரிவு 12, உட்கூறு (பி)-ன்படியும், பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு கொண்டிருக்கும் இறால் பண்ணைகளை அகற்றுவதற்கு அல்லது இடிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இறால் பண்ணைகளும் தங்களது பண்ணையினை உடனடியாக பதிவு செய்திட அறிவுறுத்தப்படுகிறது. வடசேரி, டிஸ்லரி ரோட்டில் இயங்கும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இது தொடர்பாக கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Shrimp Farms ,
× RELATED சட்டவிரோதமாக, அனுமதியின்றி...