×

அரசு உத்தரவின்றி பேரூராட்சி பணியாளர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு குமரி உதவி இயக்குனர் மீது கலெக்டரிடம் புகார்

நாகர்கோவில், ஜன.  21: தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் மாநிலத் தலைவர் எட்வர்ட் ஜெபசீலன், மாவட்ட செயலாளர் லிங்கேசபெருமாள், பொருளாளர் நம்பி, இணைச்செயலாளர் சுதர்சன், அமைப்புச் செயலாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள்  நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட பேரூராட்சிகளில் பணிபுரியும் கீழ்நிலை பணியாளர்களாகிய குடிநீர் திட்ட பணியாளர், குடிநீர் திட்ட காவலர், மின் பணி உதவியாளர் ஆகியோருக்கு அரசாணை படியும், பேரூராட்சி துறை இயக்குனர் உத்தரவுப்படியும் நாகர்கோவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கடிதம் படியும் தர ஊதியம் ரூ.1900 மற்றும் அதன் நிலுவை தொகை 2004 முதல் 2010 வரையும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நாகர்கோவில் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் எந்த ஒரு அரசாணையும் இன்றி, பேரூராட்சி இயக்குனரின் உத்தரவின்றி பணியாளரை பழிவாங்கும் செயலாக பணியாளருக்கு வழங்கப்பட்ட தர ஊதியம் ரூ. ஆயிரத்து தொள்ளாயிரத்தில் இருந்து ரூ. 1500 ஆக குறைத்தும், 2004ம் ஆண்டு முதல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலுவைத் தொகையை உடனடியாக பிடித்தம் செய்யவும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

இதனால் பணியாளர்கள் ஏற்கனவே பெற்றுவந்த ஊதியத்தில் குறைவாகவும் வழங்கப்பட்ட நிலுவைத்தொகை இந்த ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ததால், பணியாளர்கள் குடும்பம் நடத்த முடியாத அவல நிலையில் உள்ளனர். எனவே பணியாளர் நலன் காத்திட 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சி துறையில் பணிபுரிந்து வரும்  பணியாளர்களின் குடும்பம் வாழ, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் இந்த மனுவின் மீது நேரடி கவனம் செலுத்தி பேரூராட்சி உதவி இயக்குனரின் ஆணையை ரத்து செய்திட வேண்டும். மேலும் மருங்கூர் பேரூராட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வரி வசூலிப்பவராக பணி புரிபவர், பணியாளர் விரோத போக்கில் ஈடுபட்டு வருகிறார். அவரை வேறு பேரூராட்சி அலுவலகத் திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kumari ,collector ,government employees ,
× RELATED கன்னியாகுமரி டி.எஸ்.பி மீது நடவடிக்கை...