×

774 மையங்களில் முதற்கட்டமாக 42 ஆயிரம் குழந்தைக்கு போலியோ சொட்டு

ஊட்டி, ஜன. 20: நீலகிரி மாவட்டத்தில் முதற் கட்டமாக நேற்று 774 மையங்களில் 42 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை முற்றிலும் குணப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சார்பில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள வெல்பெக் எஸ்டேட் பகுதியில் நடந்த சொட்டு மருந்து வழங்கும் முகாமில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் 774 மையங்கள் அமைக்கப்பட்டு பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகள் என மொத்தம் மாவட்ட அளவில் 41 ஆயிரத்து 858 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள், அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் சுற்றுலா தளங்களில் நடமாடும் மருத்துவ மையங்கள் முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மேலும் கோயில்கள், மசூதிகள், சர்ச்கள், சோதனை சாவடி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தனியார் தேயிலை எஸ்டேட்களில் வெளிமாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்பணியில் சுகாதார துணை ஊழியர்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து மைய ஊழியர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் என 3096 பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகள் அடுத்து வரும் 2 நாட்களில் இப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பார்வையிட்டு மருந்து வழங்க உள்ளனர், என்றார். இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேஷ், நகராட்சி நகர் நல அலுவலர் முரளிசங்கர் மற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!