×

கோழிக்கழிவுகளை தின்பதால் தெருநாய்களுக்கு தோல்நோய் பாதிப்பு

தொண்டாமுத்தூர், ஜன.20:  கோவை புறநகரில் பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பிராய்லர் கோழி விற்பனை செய்யும் பெரும்பாலான கடைக்காரர்கள், கோழிக்கழிவுகளை மூட்டை கட்டி, இரவு நேரங்களில் நொய்யல் ஆறு, சித்திரை சாவடி வாய்க்கால், பள்ளம், ஓடைகள், பயன்படுத்தப்படாத வீட்டு மனைகள், மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிகளில் வீசி செல்கின்றனர். இந்த கழிவுகளை தெருநாய்கள் தின்பதால் மீதியை நடுரோட்டில் போட்டுச் செல்கிறது. இதனால், அப்பகுதியில் வாகனம் மற்றும் நடந்து செல்லும் மக்கள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், கோழி கழிவுகளை தினமும் தின்னும் தெருநாய்களுக்கு தோல் உருமாறி, சொறி, சிரங்கு பிடித்து, ரோமங்கள் இல்லாமல், தோல் தடித்து கருப்பாகவும், பிணவாடை துர்நாற்றம் வீசுகிறது.

தெருநாய்கள் கோழிக்கழிவுகளை தொடர்ந்து தின்பதால் மனிதர்கள் உட்கொள்ளும் உணவுகளை சாப்பிடுவதில்லை. இதனால் வெறி பிடிக்கும் நிலை ஏற்படுகிறது. கழிவுகளை தின்பதால், கர்ப்பிணி தெருநாய்கள், குட்டிநாய்களுக்கும் தோல் நோய் பரவி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் கோழிக்கழிவுகளை வெளியில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு உடனடி சிகிச்சையும், கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிராய்லர் கோழி இறகு ரசம்: தொண்டாமுத்தூர்  பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில்,  பெரும்பாலானோர் மாடு, மீன் போன்ற அசைவ உணவுகளை உண்கின்றனர். வேலைக்கு செல்லாத நாட்களில் பிராய்லர் கோழி இறகுகளை, ரசம் வைத்து விரும்பி சாப்பிடுகின்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்