குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க விழிப்புணர்வு

ஈரோடு, ஜன. 20:   இந்திய மருத்துவ சங்கத்தின் அனைத்து கிளைகள் மூலம் அரசு பள்ளிகள் தத்தெடுத்து குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சங்க மாநில தலைவர் ராசா தெரிவித்துள்ளார். ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஐ.எம்.ஏ ஹாலில் இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் ராசா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதில், தலைவராக டாக்டர் மயிலேறு ரவீந்திரன், செயலாளராக டாக்டர் பிரசாத், பொருளாளராக டாக்டர் விஜயகுமார் தம்பிராஜன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.  முன்னதாக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ராசா நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய மருத்துவ சங்கத்திற்கு (ஐ.எம்.ஏ) மாநில தலைவராக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இது மூன்றாவது முறையாகும். இது ஈரோட்டிற்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளது. ஈரோடு கிளையின் கடந்த ஆண்டு தலைவராக இருந்த ஜெயந்குமார் தலைமையில், 20 மாநில விருது, 5 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் ஒவ்வொரு கிளைகளின் சார்பாக அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளிடம் ஆரோக்கியம் குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்தும், மருத்துவம் சார்ந்த அரசு நலத்திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதேபோல், இந்த ஆண்டு பிறக்கும் எல்லா குழந்தைகளின் செவி திறனை சோதித்து குறைபாடு இருந்தால், அதனை முன்கூட்டியே கண்டுபிடித்து சரி செய்யும் திட்டம், எல்லா குழந்தைகளின் தைராய்டு சுரப்பி செயல்பாட்டை இலவசமாக சோதிக்க உள்ளோம். மேலும், மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தொடரப்படும் வன்முறைகளை தடுக்க தனிப்படை உருவாக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: