பொங்கல் தொடர் விடுமுறை நிறைவு பஸ், ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள்

ஈரோடு, ஜன. 20:  ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி கூடங்கள், தொழிற்சாலைகள், தனியார் வணிக நிறுவனங்கள், அரசு துறைகளில் வெளியூரை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதேபோல் ஈரோட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையையெட்டி விடப்பட்ட தொடர் விடுமுறையால், அவர்கள் பொங்கலை தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை தொடர்விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்ததால், ஏராளமானவர்கள் சொந்த ஊரில் இருந்து ஈரோட்டிற்கு திரும்பினர்.

இதனால், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வந்த அனைத்து வெளியூர் பஸ்களிலும், ஈரோடு மார்க்கமாக வந்த ரயில்களிலும் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  இதேபோல், பொங்கல் பண்டிகையை கொண்டாட ஈரோட்டிற்கு வந்த வெளியூரை சேர்ந்தவர்களும் விடுமுறை முடிந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசாம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories: