வேலூர் பழைய பஸ் நிலையத்தில் அசோகர் சின்ன தூணை ஆக்கிரமித்த தள்ளுவண்டிகள் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர், ஜன.20: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் அசோகர் சின்னம் அடங்கிய தூணை ஆக்கிரமித்த தள்ளுவண்டி கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் அசோகரின் நான்கு சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னம் அடங்கிய தூண் கட்டப்பட்டது. தொடர்ந்து தூணை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, குரோட்டன்ஸ் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரும்பு தடுப்புகளுக்கு அருகே அசோகர் தேசிய சின்னம் அடங்கிய தூணை ஆக்கிரமித்து சாலையோர தள்ளுவண்டி கடைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இத்தூணின் கம்பீரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள தேசிய சின்னத்தை தாங்கி நிற்கும் தூணை சுற்றிலும் தள்ளுவண்டி கடைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அந்த தூணின் கம்பீர தோற்றம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தள்ளுவண்டி கடைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>