வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 5 பேர் காயம்

அணைக்கட்டு, ஜன. 20: வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சோழவரம் கிராமத்தில் காளை விடும் விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. விழாவை மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் சோழவரம், பென்னாத்தூர், ஊசூர், புலிமேடு, கோவிந்தரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது.

சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கிராமத்தில் திரண்டு வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை உற்சாகத்துடன் விரட்டினர். ஒவ்வொரு காளைகளும் 2 முதல் 4 சுற்றுகள் வரை விடப்பட்டன. தொடர்ந்து, விழா மதியம் 2 மணியளவில் முடிக்கப்பட்டது. தாசில்தார் சரவணமுத்து, துணை தாசில்தார் வினாயகம், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், விஏஓ யோகன்டிஸ்வரராவ் மற்றும் வருவாய் துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விழா நடக்கிறதா கண்காணித்தனர்.

மேலும், டிஎஸ்பி வினாயகம் தலைமையில், வேலூர் தாலுகா போலீசார் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவில், மாடு முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அதில் படுகாயமடைந்த இருவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories:

>