இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கே.வி.குப்பம் அருகே பொதுமக்கள் அச்சம் அதிமுக எம்எல்ஏ சொந்த ஊரில் அவலம்

வேலூர், ஜன.20: கே.வி.குப்பம் அருகே அதிமுக எம்எல்ஏ சொந்த ஊரில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி அடுத்த செஞ்சி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 450 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் பொதுவினியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் செஞ்சி, குந்தூர், மயிலேர்திப்பை உட்பட 5 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
Advertising
Advertising

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ரேஷன் கடை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பல மாதங்களாக உள்ளது. சிமென்ட் பூச்சுகள் வெளியே பெயர்ந்துள்ளது. மேலும் உள்ளே இரும்பு கம்பிகளை தாங்கி பிடித்து கொண்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து சொந்த கிராமத்தை சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதி அதிமுக எம்எல்ஏ லோகநாதனிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

பொதுமக்கள் அன்றாடம் வந்து ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த கட்டிடத்தில் டன் கணக்கில் பொருட்கள் இருப்பு வைத்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பல மாதங்களுக்கு முன்பே இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளது. உள்ளே உட்கார்ந்து வேலையும் பார்க்க முடியாத நிலையில் விற்பனையாளர் உள்ளார். எப்போது மேலே இருந்து சிமெண்ட் பூச்சுகள் விழும் என்ற நிலை உள்ளது. புதிய கட்டிடம் கட்ட கோரி எங்கள் ஊரை சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சொந்த ஊரில்தான் இதுபோன்ற அவலங்கள் உள்ளன. பெரிய அளவில் இந்த ஊருக்கு ஒன்றும் செய்யவில்லை. அவரே காட்பாடியில்தான் தங்கி உள்ளார். இதனால் இங்குள்ள பிரச்னைகள் குறித்து அவருக்கு தெரிவது இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய ரேஷன் கடை கட்டிடத்தை கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பழுதடைந்துள்ள பால் சொசைட்டி

செஞ்சி கிராமத்தில் கூட்டுறவு பால் சொசைட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மாடுகளில் இருந்து பாலை கொண்டு வருகின்றனர். இதற்கான கட்டிடமும் பழுதடைந்துள்ளது. கட்டிடமும் விரிசல் அடைந்துள்ளது. மேலும் அக்கட்டிடத்தை சுற்றியும் முட்புதார்களாகவே காட்சியளிக்கிறது. இதுகுறித்து எம்எல்ஏவிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே அந்த கட்டிடத்துக்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: