பொங்கல் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு வெளியூர் திரும்பியதால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க கோரிக்கை

வேலூர், ஜன.20: பொங்கல் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு வெளியூருக்கு திரும்பியதால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பழையன கழிதலும். புதியன புகுதலும் என்னும் போகி பண்டிகை கடந்த 14ம் தேதியும், தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை 15ம் தேதியும், 16ம் மாட்டுப் பொங்கலும், 17ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டது. மேலும் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள், பொங்கலை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா? அதிகளவு பயணிகளை ஏற்றி செல்கிறார்களா? என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் பணிநிமித்தமாக திரும்புவதற்காக நேற்று காலை முதலே வேலூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர். குறிப்பாக சென்னைக்கு செல்வதற்காக ஒரே நேரத்தில் ஏராளாமான பயணிகள் குவிந்தனர். அப்போது ஒருசில பஸ்கள் மட்டுமே இருந்தது. அந்த பஸ்களும் அடுத்தடுத்து நிரம்பி கிளம்பி சென்றன. கால் மணி நேரத்துக்கு ஒரு பஸ் மட்டுமே சென்னைக்கு சென்றது. இதனால் வந்து நிற்கும் பஸ்சில் ஏற முண்டியடித்து கொண்டு பயணிகள் ஏறினர். இருப்பினும் வயதனவர்கள், குழந்தைகளை வைத்து கொண்டு இருந்த பெண்கள் பஸ்சில் ஏற முடியாமல் கடும் அவதி அடைந்தனர். சென்னைக்கு கூடுதலாக மேலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்தும், போதுமான பஸ்கள் மாலை நேரத்தில் விடுவது இல்லை. இதனால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் செல்ல முடியாமல் அவதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

Related Stories: