×

ஆந்திர மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் முதல்வர் தொடங்கி வைத்தார்

திருப்பதி, ஜன.20: நாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் முதல் தவணையாக ஜனவரி மாதமும், 2வது தவணையாக பிப்ரவரி மாதமும் வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிப்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கை காரணமாக போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. மேலும் அதற்கான சான்றிதழும் உலக சுகாதார அமைப்பு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்தாண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. வரும் 2020ம் ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து வினியோகம் ஆந்திர மாநிலத்தில் நேற்று சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டது.

இதனையொட்டி ஆந்திர மாநிலம் தடேப்பல்லியில் உள்ள முதல்வரின் கேம்ப் அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை முதல்வர் ஜெகன்மோகன் குழந்தைகளுக்கு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் குழந்தைகளுக்கு தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். திருப்பதி: திருப்பதி கிருஷ்ணாபுரம் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இதில் எம்பி துர்கா பிரசாத் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பேசியதாவது: நாட்டில் போலியோவை ஒழித்து போலியோ இல்லாத சமுதாயம் அமைக்க வேண்டும். இதற்காக அரசு போலியோ சொட்டு மருந்தினை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தது.

இதனால் குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம், உடல் ஊனம் ஏற்படாமல் தடுத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். பெற்றோர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி சார்பில் சுமார் 150 ஒருங்கிணைப்பாளர்கள், 600 ஊழியர்கள், 15 சிறப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 1000 பேர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பஸ், ரயில் நிலையம், பக்தர்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளளது. இன்று(நேற்று) சொட்டு மருந்து போடாத குழந்தைகளின் வீட்டிற்கு நாளை(இன்று) முதல் சுகாதாரப் பணியாளர்கள் வீடு தேடி சென்று மருந்து அளிக்கும் பணியை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவ சுகாதார அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சித்தூர்: சித்தூர் சத்ய நாராயண புரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதில் எம்பி ரெட்டியப்பா, கலெக்டர் நாராயண பரத் குப்தா கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தனர். இதில் எம்பி ரெட்டியப்பா பேசியதாவது: சித்தூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 93 ஆயிரத்து 94 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்று(நேற்று) போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. யாராவது போலியோ சொட்டு மருந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால், செவிலியர்கள் நாளை(இன்று) மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று விடுபட்டவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். அதேபோல் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 984 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 102 ஆரம்ப சுகாதார மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அதேபோல் பஸ், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் சென்டர்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி பென்சிலையா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,polio drip camp ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்