×

கள்ளக்குறிச்சி அடுத்த மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை, ஜன.20: கள்ளக்குறிச்சி அடுத்த மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் நேற்று அண்ணாமலையார் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5ம் நாள், திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலையில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மேளதாளம் முழங்க, மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றுக்கு புறப்பட்டார். அப்போது, வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு மண்டகபடி செலுத்தினர்.

பின்னர், மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடந்தது. அப்போது, மணலூர்பேட்டை விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், முத்து மாரியம்மன், சிவகாம சுந்தரி சமேத அகத்தீஸ்வரர் அலங்கார ரூபத்தில் அண்ணாமலையாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீர்த்தவாரி நிறைவடைந்த நிலையில், அண்ணாமலையார் இன்று(திங்கள்) அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்கு திரும்புகிறார். அப்போது, வழிநெடுகிலும் கிராம மக்கள் சுவாமிக்கு மண்டகபடி செலுத்துவார்கள். இவ்விழாவின் தொடர்ச்சியாக வரும் 1ம் தேதி ரதசப்தமி நாளன்று கலசபாக்கம் பகுதியில் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

Tags : devotees ,river ,Manalurpet ,Kallakurichi ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...