×

ஆரோக்கிய இந்தியா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தூத்துக்குடி,ஜன.20: தூத்துக்குடியில் ஆரோக்கிய இந்தியா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தூத்துக்குடி எஸ்பி அருண் கோபாலன் துவக்கி வைத்தார். பெட்ரோலிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி சங்கம் இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குடிமக்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவும், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தியும்  கடந்த 16ம் தேதி  முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை நீண்ட விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், எரிபொருள் சிக்கனத்தையும் வலியுறுத்தி பெட்ரோலிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சைக்கிள் பேரணி நடந்தது.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணியை தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன், கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அவரது தலைமையில் எரிபொருள் சிக்கனத்தையும், பாதுகாப்பையும் வலியுறுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த சைக்கிள் பேரணி பாளை ரோடு,விவி சிக்னல், மாநகராட்சி அலுவலகம், டபிள்யூஜிசி ரோடு, ஜிசி ரோடு வழயிக  பீச் வரை சென்றது. இப்பேரணியில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் டி.எம்.பி மெக்கவாய் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சார்பில் ஆரோக்கிய இந்தியா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை ஓட்டப்பிடாரம் ஊராட்சித்தலைவர் இளையராஜா துவக்கிவைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வளர்மதி, தலைமை ஆசிரியை வனஜா மங்கல செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் உடற்பயிற்சியைப்போல் தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் பயிற்சி செய்வதன் அவசியம் மற்றும் உடல் நடலத்தினை பேணுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் குறுக்குச்சாலை அரசு பள்ளி மற்றும் பாஞ்சாலங்குறிச்சி பள்ளி உள்பட ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் ஆரோக்கிய இந்தியா திட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

குளத்தூர்: குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரோக்கிய இந்தியா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. விளாத்திகுளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலாபர்அலி தலைமை வகித்தார். விளாத்திகுளம் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வக்குமார் நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சியினால் உடலுக்குள் ஏற்படும் புத்துணர்வு நன்மைகள் குறித்து பேசினார். தொழிலதிபர் செல்வப்பாண்டி பேரணியை துவக்கிவைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி குளத்தூர் பஜார் மற்றும் முக்கிய வீதிகளில் நடந்தது. குளத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரிச்செல்வி, வார்டு உறுப்பினர்கள் கெங்குராஜன், ஜோதி, ஊராட்சி மன்ற செயலாளர் நட்டார்தேவி, பழைய மாணவர் சங்க செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியம் தச்சமொழி ஊராட்சிக்குட்பட்ட விஜயராமபுரத்தில் ஆரோக்கிய இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. தச்சமொழி ஊராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணிக்கு தச்சமொழி ஊராட்சித் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியில் இளைஞர்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் வலிமை பெரும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. பேரணியானது முக்கிய வீதி வழியாக சென்றது. இதில் ஊராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன், 2வது வார்டு உறுப்பினர் அந்தோணிராஜ் உள்ளிட்ட பள்ளி  மாணவர்கள் கலந்து கொண்டனர்.  ஊராட்சி செயலர் பிரமநாயகம் நன்றி கூறினார்.

Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு