தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் தெப்பக்குளமாக மாறியது பாசிபடர்ந்து நோய் பரவும் அபாயம்

தூத்துக்குடி,ஜன.20: தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றப்படாததால் தெப்பக்குளமாக மாறியுள்ளது. பாசிபடர்ந்து சுகாதார கேடாக இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. தூத்துக்குடியில்  கடந்த மாதம் இறுதி வரையில் பெய்த பருவமழை மற்றும் புயல் மழை காரணமாக 2000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த வெள்ள நீரை இன்று வரையில் பெரும்பாலான பகுதிகளில் அகற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் ஸ்டேட்பாங்க் காலனி, தனசேகரன்நகர், ராஜகோபால்நகர், கதிர்வேல்நகர், ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் சூழ்ந்து நிற்கிறது. வீடுகளை சுற்றிலும் வெள்ள நீர் உள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகமும் கைவிட்ட நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து வெள்ள நீரை அகற்றியுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில்  வெள்ள நீர் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. முக்கியமாக தனசேகரன் நகர் பகுதிகளில் உள்ள பூங்காக்கள், தெருக்கள், குடியிருப்புகளில் இன்றும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. சுமார் 3 அடி ஆழம் வரையில் தேங்கியுள்ள இந்த வெள்ள நீரில் பாசிபடர்ந்து, நீர்த்தாவரங்கள் வளர்ந்து தெப்பக்குளங்கள் போல காணப்படுகிறது.

Advertising
Advertising

இங்குள்ள பூங்காக்களில் தேங்கிய இந்த மழை நீரில் தேரைகள், தவளைகள் உள்ளிட்டவை தோன்றி இரவு நேரத்தில் பெரும் ரீங்காரமிடுகின்றன. மேலும் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி  பெரும் சுகாதர சீர்கேடு ஏற்பட்டு காயச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாம்பு, பூரான்கள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் வீடுகளுக்குள் படையெடுத்து வருகின்றன. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சகதிகாடாக மாறியுள்ளது.  தேங்கிய  நீரை அகற்றகோரியும், சாலையை  சீரமைக்க கோரியும், மாநகராட்சியில் பலமுறை இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து  தனசேகரன் நகர் பகுதி பொதுமக்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Related Stories: