சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

வி.கே.புரம், ஜன.20: பாபநாசத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்ைல மாவட்டம் பாபநாசத்தில் பாபநாச சுவாமி கோவில், அகஸ்தியர் அருவி, காரையாறு சொரிமுத்தய்யனார் கோவில் உள்ளன. இப்பகுதி சுற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்தனர். இவர்களில் பலர் பாபநாசம் கோவிலுக்கு செல்லவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வதற்காகவும் தங்களுடைய கார், வேன் போன்ற வாகனங்களை பாபநாசம் கோவில் மேற்புறம் உள்ள சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தி சென்றனர். இதனால் அகஸ்தியர் அருவி, பாபநாசம் பணிமனைக்குச் செல்லும் வாகனங்களும் சாலையில் செல்ல முடியாதவாறு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனவே, விடுமுறை நாட்களில் இப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். நகராட்சி நிர்வாகம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED கடத்தூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்