சேரன்மகாதேவியில் எஸ்.பி ஆய்வு

வீரவநல்லூர், ஜன.20: சேரன்மகாதேவி மேலதெற்கு தெருவைச் சேர்ந்தவர் அழகு மகன் குமார்(36), பால் வியாபாரி. இவரை நேற்று முன்தினம் ராமசாமி கோயில் அருகில் மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். படுகாயமடைந்த குமாருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி போலீசார் வழக்குபதிந்து சம்பவ பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த நேரத்தில் அவ்வழியாக 20 வயதிற்குட்பட்ட 4 பேர் ஓடுவது தெரியவந்தது.  இதை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த திருக்கார்த்திகை அன்று கொழுந்துமாமலை முருகன் கோயிலில் நடந்த அன்னதானத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது பால்வியாபாரி குமார் ஒரு தரப்பிற்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான 4 பேரை தேடிவருகின்றனர்.  இந்நிலையில் நேற்று மாவட்ட எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சந்தேக நபரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தால் சேரன்மகாதேவியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED சேரன்மகாதேவி ஸ்காட் கல்வி நிறுவன விளையாட்டு விழா