தென்காசி மத்தளம்பாறை கிராமத்தில் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவால் சுகாதாரகேடு

தென்காசி, ஜன. 20:  தென்காசி அருகே மத்தளம்பாறை கிராமத்தில் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார கேடு நிலவுவதோடு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மத்தளம்பாறையை அடுத்த பகுதியில் சாலையோரம் தொடர்ச்சியாக குப்பைகளும், இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது.  இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது.  இதே போல் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய பிரச்னை காணப்படுகிறது.  குறிப்பாக இரவு வேளைகளில் கேரளாவில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் இறைச்சி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகள் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களிலும்,  நீர்நிலைகளிலும்,  விளை நிலங்களிலும் கொட்டப்படுகிறது. புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம், பழைய குற்றாலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சாலையில் இதுபோன்ற துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு காணப்படுவது சுற்றுலாப் பயணிகளின் பயணிகளுக்கு அசவுகரியமாக உள்ளது.

இந்தப் பகுதி கீழப்பாவூர் ஒன்றியம் குணராமநல்லூர் ஊராட்சியில் இடம்பெற்றுள்ளது.  ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது சுத்தம் செய்தாலும்,  அருகிலுள்ள ஊராட்சிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்து வரும் ஆட்டோ, மினி லாரி மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் கழிவுகளை அந்தப் பகுதி சாலையோரங்களில் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது.  சுற்றுலா தலத்திற்கு செல்லும் சாலையாகவும் வழிபாட்டுத் தலங்கள் உள்ள பகுதியாகவும் ஐ.டி. நிறுவனம் உள்ள பகுதியாகவும் விளங்கும் இந்த சாலையில் இதுபோன்று கழிவுகளை கொட்ட வரும் வாகனங்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..  மேலும்  உள்ளூர்களில் சேகரிக்கப்படும் இறைச்சி கழிவுகளும்,   மீன் கழிவுகளும்  இதுபோன்ற சாலையோரங்களில் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Tags : village ,Thenkasi Mattalamparai ,
× RELATED ஆணையர் அறிவுறுத்தல் வயலூர்...