×

கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் வருவாய்த்துறை இணைய தள சேவை முடக்கம் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்பு

கடையம், ஜன.20: கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் வருவாய்த்துறை இணைய தள சேவை முடங்கியதால்  ஆன்லைன் சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து கடந்த ஆண்டு நவ.12ம்தேதி தென்காசி மாவட்டம் உருவானது. இதனால் அம்பை தாலுகாவில் இருந்த கடையம், ஆழ்வார்குறிச்சி குறுவட்டங்கள் தென்காசி தாலுகா மற்றும் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதி மக்கள் கடந்த டிசம்பர் மாதம் வரை வருவாய்த்துறை மூலம் பெறப்படும் சான்றிதழ்கள் அம்பை தாலுகா வழியாக  பெற்று வந்தனர்.

இதனையடுத்து தென்காசி தாலுகா மூலம் ஆன்லைன் சான்றிதழ் பெறுவதற்காக அம்பையிலிருந்து தென்காசிக்கு மாற்றக்கூடிய இணைய தள பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவுற்று ஜனவரி முதல் வாரத்திலிருந்து அமலுக்கும் வந்தன. ஆனால் கடந்த 15 தினங்களாக வருவாய்த்துறை இணைய தள சேவை முடங்கி கிடக்கின்றன.
இதனால்  வருமான சான்றிதழ், பட்டா, இருப்பிடசான்றிதழ், சாதி சான்றிதழ், ஓபிசி சான்றிதழ், திருமண உதவி தொகை சான்றிதழ் உள்ளிட்ட 21 வகையான வருவாய்த்துறை மூலம் பெறக்கூடிய சான்றிதழ்கள் பெற முடியாமல் கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி மக்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே தென்காசி மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு இணைய தள சேவையை சரி செய்து ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையம், ஆழ்வார்குறிச்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Adivargurichi ,shop ,
× RELATED வருவாய்துறை அலுவலர்கள் கூட்டம்