நெல்லை, தென்காசியில் 2ம் நாளாக சாரல் மழை குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

நெல்லை, ஜன. 20:  நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 2ம் நாளாக ேநற்று பரவலாக சாரல் மழை பெய்தது.  பெரும்பாலான பகுதிகளில் மழையளவு 28 மி.மீ. என பதிவானது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பருவமழை பெய்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழித்தன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் இறுதியில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஜனவரி 2ம் வாரத்தில்  கடும்குளிர் வாட்ட துவங்கியது.

இதனால் மாலை முதல் அதிகாலை வரை பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவிவந்தது. பின்னர் பகல் நேரத்தில் வெயிலும் அடித்தது.  நேற்று முன்தினம் பாளை, அம்பை, நாங்குநேரி, பாபநாசம் பகுதிகளில் சுமாரான மழை பெய்தது. தொதடர்ந்து நேற்று 2ம் நாளாக காலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. பாபநாசம், விகேபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை காலை முதல் பெய்தது. இந்நிலையில் நெல்லை மாநகர பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 9 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 13 மில்லி மீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறில் 5 மிமீ, சேரன்
மகாதேவியில் 4 மிமீ மழை பெய்தது.

அம்பையில் 2.10 மிமீயும் பாளை, நெல்லை தாலுகாவில் தலா 2 மில்லி மீட்டரும் என மாவட்டம் முழுவதும் நேற்று பகலில் மட்டும் 28.10 மிமீ மழை பதிவானது. 2 நாட்களாக பனிபொழிவும் இல்லை. தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்த நிலையில், 2ம் நாளாக நேற்றும் அதிகாலை பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் அருவிகளில் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

Tags : paddy fields ,
× RELATED வறட்சியால் நீர் வரத்து பாதிப்பு மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு சரிவு