சின்னப்பம்பட்டி, வீராணத்தில் எருதாட்டம் கோலாகலம்

இடைப்பாடி, ஜன.20: இடைப்பாடி அருகே சின்னப்பம்பட்டியில் எருதாட்ட விழா கோலாகலமாக நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. பொங்கல் பண்டிகையையொட்டி, கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சி சின்னப்பம்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் நேற்று எருதாட்டம் நடந்தது. இந்த விழாவில் முனியம்பட்டி, அக்கரைபட்டி, பாப்பம்பாடி, எட்குட்டை மேடு, சின்னப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை கோயில் முன் நிறுத்தி பூசாரி பூஜை செய்து பொம்மை, ஆட்டு தோல் கட்டிவிட்டனர். இதன் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் திரண்டு காளைகளை அடக்க முயன்றனர். ஆனால் பிடிகொடுக்காத காளைகள் வீரர்களை இழுத்து சென்றது. இந்நிகழ்ச்சியை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

சேலம்: சேலம் அடுத்த வீராணம் பள்ளிக்கூடத்தானூரில் நடந்த எருதாட்டத்தில், 20க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, எருதாட்டம் விழா நடைபெற்று வருகிறது. இந்த வகையில், நேற்று வீராணம் அடுத்த பள்ளிக்கூடத்தானூர் மாரியம்மன் கோயிலில் திடலில், எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த எருதாட்ட நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் மாரியம்மன் கோயிலை மூன்று முறை சுற்றி வலம் வந்தன. பானை உடைத்தல், கயிறு இழுத்தல் ேபாட்டி, ஸ்லோ சைக்கிளிங் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நெடுந்தொலைவில் இருந்து காளைகளை கொண்டு வந்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: