ஓமலூரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

ஓமலூர், ஜன.20:  ஓமலூரில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஓமலூர், தீவட்டிப்பட்டி ஆகிய இரண்டு காவல் நிலைய கிராமங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகள், இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஓமலூர் பஸ் ஸ்டாண்ட், முத்துநாயக்கன்பட்டி, காமலாபுரம், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை குறிவைத்து, ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக ஓமலூர் டிஎஸ்பிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் டிஎஸ்பி பாஸ்கரன், ஓமலூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஓமலூர் அருகே ஊ.மாரமங்கலம் சுடுகாட்டு பகுதியில், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 இளைஞர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டியப்பட்டியை சேர்ந்த விஜய், ஜோஷி, கோமாளியூரைச் சேர்ந்த அஜித், கருப்பணம்பட்டியை சேர்ந்த  சூர்யா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: