×

பொங்கல் பண்டிகையையொட்டி ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

ஆத்தூர், ஜன.20: பொங்கல் பண்டிகையையொட்டி ஆத்தூர் அருகே முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் திரண்டதால், வனத்துறையினருக்கு ₹4.25 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஆத்தூர் ஒன்றியம் கல்லாநத்தம் கிராம ஊராட்சியில் அமைந்துள்ள முட்டல் மலை கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான கல்வராயன் மலைத் தொடரில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இது சுற்றுலா தலமாக அறிவிப்பட்டுள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி, தங்கும் குடில்கள் அமைத்து பராமரித்து வருகிறது. விடுமுறை தினங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். கடந்த பொங்கல் தொடர் விடுமுறை தினங்களான 5 நாட்களில், ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு வந்து நீராடி சென்றுள்ளனர்.

மேலும் பல மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் முட்டல் ஏரி, படகு சவாரி, நீர்விழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்ப்பதற்கு நுழைவு கட்டணமாக வனத்துறைக்கு ₹4.25 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதனிடையே, சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்களே தவிர, சுற்றி பார்ப்பதற்காக வசதிகளை செய்து தராமல், அருவியில் குளிக்க மட்டுமே அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பூங்கா போல் அமைத்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நீர்வீழ்ச்சியும், படகு சவாரியும் மட்டுமே உள்ளது.  எனவே, முட்டல் சுற்றுலா தலத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : festival ,Anavari Falls ,Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா