திருச்செங்கோடு அருகே கால்நடை கிளை நிலையம் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருச்செங்கோடு, ஜன.20:  திருச்செங்கோடு அருகே கால்நடை கிளை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம், செண்பகமாதேவி ஊராட்சிக்குட்பட்ட சின்னார்பாளையம் கிராமம் எட்டிமடை பகுதியில்  கால்நடைத்துறை சார்பில் கிளை  கால்நடை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று திருச்செங்கோடு பொன்.சரஸ்வதி திறந்து வைப்பதாக இருந்தது. இப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், 2500க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ள நிலையில் கிளை கால்நடை நிலையம் திறப்பதால்  செண்பகமாதேவி, பள்ளக்குழி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்களம் ஆகிய 4 ஊராட்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 6 கி.மீ., கடந்து வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த  விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கரட்டுவளவு பகுதியில் கால்நடை கிளை மருந்தகத்தை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்து விழா நடக்க இருந்த எட்டிமடை பகுதிக்கு திரண்டு வந்தனர்.

மேலும், தகவல் அறிந்த நாமக்கல் எம்பி  சின்ராஜ் உள்ளிட்டோரும் அங்கு விரைந்தனர். ஏற்கனவே திறப்பு விழா நிகழ்ச்சிக்காக 100க்கும் மேற்பட்ட அதிமுகவினரும் அங்கு குவிந்திருந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த  திருச்செங்கோடு  டிஎஸ்பி(பொ) பழனிசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். மேலும், அதிவிரைவுப்படை வாகனமும் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், எம்பி சின்ராஜ் உள்ளிட்டோர் விழா பந்தலில்  அமர்ந்திருந்தனர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விழா நடத்துகிற நாங்கள் வெளியே நின்று கொண்டிருக்கும் நிலையில், விழாவை நிறுத்த வந்தவர்கள் பந்தலில் உட்கார்ந்திருப்பதா என கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.  வாக்குவாதம் முற்றியதில் தள்ளுமுள்ளு உருவானது. உடனே, டிஎஸ்பி பழனிசாமி தலையிட்டு சமரசப்படுத்தினார். இதனால், மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், கலெக்டர்  மெகராஜ்  மற்றும் மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநர் பொன்னுவேல் ஆகியோரிடம், சின்ராஜ் எம்.பி. தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  பின்னர், பொதுமக்கள் குறிப்பிடும் கரட்டுவளவு பகுதியை பார்வையிட்டார். இதற்கிடையே அங்கு வந்த பொன்.சரஸ்வதி  எம்எல்ஏ கிளை நிலையத்தை திறந்து வைத்தார்.  இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தற்காலிகமாக இந்த இடத்தில் கிளை கால்நடை நிலையம் திறக்கப்படுகிறது. விரைவில் கலெக்டர் மற்றும் மாவட்ட  கால்நடைத்துறை இணை இயக்குநர் ஆய்வு செய்து, பொதுமக்கள் கருத்தை கேட்டு முடிவு செய்வார்கள். மக்கள் நலனுக்காகத் தான் திட்டத்தை செயல் படுத்துகிறோம். இதனை யாரும் தடுக்க வேண்டாம்,’ என்றார்.

Tags : cattle branch ,Tiruchengode ,
× RELATED இழப்பீடுக்காக கார்களை ஜப்தி செய்ய...