×

போச்சம்பள்ளி அருகே பரபரப்பு செல்போன் டவர் மீது ஏறி போக்கு காட்டிய போதை ஆசாமி

போச்சம்பள்ளி, ஜன.20: போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் 100 அடி உயர செல்போன் டவரில் ஏறிய போதை ஆசாமியை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சேகர்(60). இவர் மதுவிற்கு அடிமையானதால், தினசரி போதையில் இருப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் மது குடித்த சேகர், கடைக்கு எதிரே உள்ள 100 அடி உயர செல்போன் டவரில் திடீரென ஏறினார்.

இதை கவனித்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை கீழே வரும்படி கூறினர். அவர் கீழே வராததால், இளைஞர்கள் சிலர் டவர் மீது ஏற முயன்றபோது, கீழே குதித்துவிடுவதாக மிரட்டினார். இது குறித்த தகவலின் பேரில், அங்கு வந்த பாரூர் இன்ஸ்பெக்டர் கபிலன் அவரை சமாதானப்படுத்தி பேசியபடி டவர் மீது ஏறினார். அப்போது கீழே குதித்து விடுவதாக அவர் மிரட்டியதால், பாதி தூரம் சென்ற இன்ஸ்பெக்டர்  கபிலன் திரும்பி வந்துவிட்டார். இதையடுத்து, டவரின் உச்சிக்கு சென்ற சேகர், பாக்கெட்டில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு அங்கேயே மது போதையில் நடனமாடினார்.

பின்னர் தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து பொதுமக்கள் மீது வீசினார். இதனால், என்ன செய்வது என திகைத்த போலீசார், சேகரின் நண்பர் ஒருவரை வைத்து மேலே ஏறச்செய்தனர். அவரையும் ஏறக்கூடாது என மிரட்டிய சேகரிடம், உன்னை காப்பாற்ற வரவில்லை, உனக்கு மது வாங்கி வைத்திருப்பதாக கூறி மது பாட்டிலை காட்டியவாறு அவர் மேலே ஏறினார். அதற்கு சம்மதித்த சேகர் அவரை மேலே அழைத்தார். தொடர்ந்து, மேலே சென்ற அவர் சேகரிடம் மது பாட்டிலை கொடுத்து, அவரை அங்கேயே இருக்கமாக கட்டி பிடித்துக்கொண்டார். இதையடுத்து, டவர் மீது ஏறிய தீயணைப்பு வீரர்கள் அவரது கை, கால்களில் கயிற்றால் கட்டி மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டவர் மீது ஏறி போக்கு காட்டிய போதை ஆசாமியால் 3 மணி நேரம் அரசம்பட்டியில் பரபரப்பு நிலவியது.

Tags : Asami ,Pochampally ,cell phone tower ,
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...