×

வெட்டும் பணி தாமதத்தால் பூத்து குலுங்கும் ஆலைக்கரும்பு

அரூர், ஜன.20: தர்மபுரி மாவட்டம் அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட அரூர், மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நடப்பாண்டில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஆலைக்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்புகளை சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், சுமார் 1500க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் கரும்பு வெட்டாமல் தேக்க நிலையிலேயே உள்ளது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2,500 டன்னும், அதிகபட்சமாக 2600 டன் கரும்பு அரைக்கும்  தன்மை கொண்டது இந்த ஆலை. சரியான முறையில் செயல்பட்டிருந்தால் ஒரு மாதத்தில் கரும்புகள் அனைத்தும்  வெட்டப்பட்டிருக்கும். தமிழகத்தில், தர்மபுரி மாவட்ட கரும்பு என்றால் தனி மவுசு உண்டு. 10.5 பிழித்திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ₹2960 விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளது. வழக்கமாக  கடந்த ஆண்டு கரும்பு அரவையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.  கடந்த ஆண்டுக்கு முன்பு வெளி மாவட்டங்களிலிருந்து ஆலை நிர்வாகம் கரும்பினை விலைக்கு வாங்கி  அரவை செய்ததால் இந்த ஆண்டு விலை குறைந்தது. ஆலையில் அரவைக்கு கரும்பு பற்றாக்குறை ஏற்படுவதால் அருகில் உள்ள மாவட்டங்களில்  கரும்புகளை வாங்குவது வழக்கம்.

நடப்பாண்டில்  ஓரளவு பெய்த மழையால்  நன்கு விளைந்தும், சரியான நேரத்தில் வெட்டப்படாததால் கரும்புகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கரும்பு அரவை துவங்கும். இந்த ஆண்டு  காலதாமதமாக டிசம்பர் மாதம் துவங்கியது. கடந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாய நிலங்களில் காய்ந்து போன கரும்புகளை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்திய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். நடப்பாண்டில் நன்கு பெய்த மழையால் விளைச்சல் அதிகரித்தது. இந்நிலையில், கரும்பு விளைந்தும்  வெட்டுவதற்கு தொழிலாளர்கள் கிடைக்காமால், விளை நிலங்களில் கரும்பு காய்ந்த  நிலையில் காணப்படுகிறது. வெட்டுவதற்கு காலதாமதமானதால் பூத்து குலுங்குகிறது. இதனால், கரும்பு பிழி திறன் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தோட்டத்தில் எலிகள் புகுந்து கரும்புகளை நாசம் செய்வதும் அதிகரித்துள்ளது.

Tags : flowering plant ,
× RELATED மலர் செடி கருகியதால் விவசாயிகள் கவலை