பொங்கல் விடுமுறை முடிந்தது பணியிடத்திற்கு திரும்பிய மக்களால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதல்

தர்மபுரி, ஜன.20: பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில், தர்மபுரியில் இருந்து சேலம், சென்னை, பெங்களூரு மற்றம் ஓசூர் செல்லும் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு இடங்களில் தங்கியிருந்து பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர். குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, அனைவரும் பணியிடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதேபோல், வெளியூர்களில் உள்ள கல்வி நிலையங்களில் பணியாற்றி வரும் மாணவ- மாணவிகளும் புறப்பட்டனர். அனைவரும் ஒரே நேரத்தில் புறப்பட்டுச் சென்றதால் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், ரயில் நிலையத்திலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

பொங்கல் பண்டிகையொட்டி, தர்மபுரி மண்டல அளவில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தர்மபுரி மற்றும் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து செல்ல வசதியாக நேற்றும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டது. நேற்று காலை முதலே பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு மக்கள் படையெடுத்தனர். அனைவரும் ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு சென்றதால் தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தங்கள் உடமைகளுடன் பேருந்துக்காக காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பஸ்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். சேலம், பெங்களுரு, ஓசூர் மற்றும் சென்னை மார்க்கமாக சிறப்பு பஸ்கள் சென்று வந்தன. தர்மபுரி ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறினர். குறிப்பாக, பெங்களூரு, கோவை மார்க்கமாக சென்ற ரயில்களில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Tags : holiday ,Pongal ,
× RELATED விடுமுறையை கொண்டாட பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகை