தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்

தஞ்சை, ஜன.20: தஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். தஞ்சாவூர் பெரியகோயிலில் வரும் பிப்.5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலில் விநாயகர், முருகன், பெரியநாயகி அம்பாள், நடராஜர் ஆகிய சன்னதிகள் திருப்பணிகள் நடைபெற்று முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், விமான கோபுரத்தில் உள்ள கலசமும் அகற்றப்பட்டு அவை மீண்டும் பிரதிஷ்டை செய்ய தங்கமுலாம் பூசும் பணியும், நந்தி மண்டபம் முன்பு உள்ள பழைய கொடிமரம் பழுதடைந்ததையடுத்து புதிய கொடிமரம் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக சென்னையிலிருந்து பர்மா தேக்கு 40 அடி உயரத்துக்கு வாங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேற்று கோயிலுக்கு வருகை தந்து கும்பாபிஷேக முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

அப்போது, கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்லும் வழி, கோபுரங்களுக்கு புனிதநீர் கொண்டு செல்லும் பாதை, கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி, புதிய கொடிமரம் ஆகியவற்றை பார்வையிட்டு கும்பாபிஷேகத்தின் போது கூட்ட நெரிசல் இல்லாமல் எப்படி விழாவினை நடத்துவது என ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். ஆய்வின் போது, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, திருப்பணிக்குழு தலைவர் துரை.திருஞானம், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், டிஎஸ்பிக்கள் ரவிச்சந்திரன், முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி நேற்று ராஜாபாளையம் குற்றலநாதர் உழவாரப்பணி குழுவினரும், கும்பகோணம் திருநாவுக்கரசர் உழவாரப்பணி குழுவினரும் சுமார் 200 பேர் கோயிலில் கிரிவலபாதை, நந்தவனம், நுழைவுவாயில் பகுதிகளில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: