×

கலெக்டர் ஆய்வு குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி செல்போன் டார்ச் லைட் அடித்து போராட்டம்

பட்டுக்கோட்டை, ஜன.20: குடியுரிமை திருத்து மசோதாவை திரும்ப பெறக்கோரி செல்போன் டார்ச் லைட் அடித்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூரில் இஸ்லாமிய இயக்கங்கள் ஜமாத்களின் கூட்டமைப்பு சார்பில் மார்க்கெட் தர்கா திடலில் ஈழத்தமிழர்கள், இஸ்லாமியர்கள் குடியுரிமையை பறிக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி என்ஆர்சி - சிஏஏ - என்.பி.ஆர். புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு நடந்தது. மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. தமிமுன்அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுச்செயலாளர் நிஜாம்முகைதீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக் கழகப் பேச்சாளர் பழனிபாரூக், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, தமிழ் விடுதலைப்புலி கட்சி குடந்தை அரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் கேம்பாஸ் ஃப்ரண்ட் விதைகள் கலைக்குழுவினர் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி முழக்கங்களை பாட்டாக பாட, மாநாட்டில் கலந்து கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது செல்போனில் உள்ள டார்ச் லைட்டை அடித்து தமிழிலும், ஹிந்தியிலும் முழக்கங்களை பாட்டாக பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநாட்டில் ஈழத்தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் கொடிய சட்டமான சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். கேரளா, மேற்குவங்காளம், பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தமாட்டோம் என்று எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதைப்போல தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மதரீதியாக மக்களை தொடர்ந்து பிளவுப்படுத்திவரும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர், பொன்னார், பிரேமலதாவிஜயகாந்த், ராதாரவி போன்றவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேஎன்யூ, ஜாமியாமில்லியா, அலிகார் ஆகிய பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி கயவர்களை உடனே தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் மத்திய அரசையும், காவல்துறையையும் கண்டிப்பது. கன்னியாகுமரியில் காவல் துணை ஆய்வாளர் வில்சன் படுகொலையை வன்மையாக கண்டிப்பதுடன், எஸ்.ஐ. வில்சன் படுகொலையில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் தமிழ் தேசிய போராளிகளை தொடர்ந்து முடக்கி வரும் தமிழக அரசையும், காவல் துறையையும் கண்டிப்பது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டிப்பது, தொடர் போராட்டம் நடத்தி வரும் கல்லூரி மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவக்கூடிய காவல்துறையை கண்டிப்பது என்பது உள்பட9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...