கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 31ம்தேதி ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜன.20: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31ம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பாரம்பரிய உடை அணிந்து அரசு பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார் .தஞ்சையில் நேற்று அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அதிகாரிகளும் விடுமுறை நாட்கள் மற்றும் பணி முடிந்த பிறகு ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு கூட விடுமுறை கிடைக்கவில்லை. இதனை கைவிட வேண்டும். ஆர்.டி.ஐ. சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட விசாகா கமிட்டியை செயல்படுத்த வேண்டும். பணிபுரியும் பெண்கள் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிப்பதற்கு அரசு அமைத்த சிறப்புக் குழுவை உடனே அமல்படுத்த வேண்டும்.

மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஆனால் அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது கூட போதியளவில் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. எனவே மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்.

வருமான வரி உச்சவரம்பை ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு அரசின் தவறான கொள்கைகளே காரணம் ஆகும். யாரிடம் பணம், பொருட்கள் குவிந்து கிடைக்கிறதோ அவர்களுக்கு வரி சலுகை கிடைக் கிறது. இப்படி இருந்தால் பொருளாதாரம் மந்தநிலையை எப்படி போக்க முடியும்.பொருளாதார மந்த நிலையைப் போக்குவதற்கு நோபல் பரிசு பெற்ற வல்லுநர்கள், உயர் அதிகாரிகள் பல்வேறு யோசனைகளை கொடுத்துள்ளனர். அவற்றில் முக்கியமான அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும், பென்சன் தொகை ரூ .10,000 வழங்க வேண்டும். இப்படி செய்தால் அவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். அதன் காரணமாக பொருளாதார மந்த நிலையையும் எளிதாகப் போக்க முடியும். இந்தக் கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி வரும் 31ம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பாரம்பரிய உடை அணிந்து அரசு பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அதாவது ஆண்கள் வெள்ளை வேட்டி ,சட்டை மற்றும் தலையில் சிகப்பு முண்டாசும் , பெண்கள் சிகப்பு சேலை, வெள்ளை முண்டாசு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்றார் .

Related Stories: