×

அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்த வேண்டும் உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்

தஞ்சை, ஜன.20: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை முற்றிலும் தமிழ்வழியில் நடத்த வேண்டும் என தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: வரும் பிப்.5ம் நாள் நடைபெறவுள்ள தஞ்சை பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்திட தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து, 22.01.2020 அன்று தஞ்சை - காவேரி திருமண மண்டபத்தில் முழுநாள் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை வரவேற்றும் வாழ்த்தியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில், தமிழ்நாடு அரசுக்கு மேற்படி குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்திட கோரிக்கையும் வைத்துள்ளார்கள். முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சாமிநாதன் தமிழ்வழிக் குடமுழுக்குக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பல்வேறு ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்த பெருமக்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்திட கேட்டுக் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க. ஸ்டாலின் அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டுத்துறை அமைச்சர் ம.பா. பாண்டியராசன் , தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு சமஸ்கிருதத்திலும் நடக்கும் - தமிழிலும் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

சமஸ்கிருதம் முற்றிலுமாகத் தவிர்த்து, தமிழ்வழியில் மட்டும் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்பதுதான் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை, தமிழ்நாடு அரசின் ஆணைகளுக்கு இசைவானதே. தமிழில் கருவறையில் அர்ச்சனை மந்திரங்களை சொல்லி வழிபாடு நடத்த தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆணையிட்டிருக்கிறது. அதற்கான தமிழ் அர்ச்சனை மந்திரங்களையும் நூலாக வெளியிட்டிருக்கிறது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சான்றிதழும் வழங்கியிருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு தனது அரசாணைகளுக்கு இசையவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்பவும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை சிறிதும் சமஸ்கிருதக் கலப்பின்றி தமிழ்வழியில் நடத்திட முடிவெடுத்து செயல்படுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : State Employees Union Announces Right to Rescue Committee ,Conduct Thanjaya Periya Temple ,
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...