×

திருமயம் பஸ் ஸ்டாண்டில் தவறவிட்ட 15 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு

திருமயம், ஜன.20: திருமயம் பஸ் ஸ்டாண்டில் கண்டெடுக்கப்பட்ட 15 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பஸ் ஸ்டாண்டிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திருமயம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனை எடுத்த ஒரு பெண்மணி பஸ்ஸ்டாண்டில் கடை வைத்திருக்கும் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் ஒப்படைத்தார். இதனைத்தொடர்ந்து பையை திறந்து பார்த்தபோது அதில் நகை, பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பையை ஊராட்சி மன்ற சிக்கந்தர் திருமயம் காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் குடியிருக்கும் திருமயம் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த மீனாள் என்பவர் நகை, பணத்தை தவற விட்டதாக திருமயம் பஸ் ஸ்டாண்டில் புலம்பியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் நகை பணம் அடங்கிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருமயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற மீனாள் தவறவிட்ட ஒரு செயின், 2 வளையல், ஒரு மோதிரம் உள்ளிட்ட 15 பவுன் நகை, ரூ. 440 பணம் உள்ளிட்ட அடையாளங்களைக் கூறினார். அதனைத்தொடர்ந்து பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன் மீனாவிடம் விசாரணை செய்து தவற விட்ட பொருளை ஒப்படைத்தார். மேலும் தவறவிட்ட நகையை உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரை போலீசார் பாராட்டினர். நகைப்பையை தவற விட்ட மீனா நகை கிடைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

Tags : Thirumayam ,
× RELATED புதுக்கோட்டையில் மழை காரணமாக ஒன்றிய...