புதுக்கோட்டையில் 1,356 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம்

புதுக்கோட்டை, ஜன.20: புதுக்கோட்டை நகராட்சி கோவில்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன்குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் யாழினி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளி கூடங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற ஆயிரத்து 356 மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட ஒரு லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இம்முகாமினை சிறப்புற நடத்திட சுகாதாரம், மருத்துவம், வருவாய், சத்துணவு, கல்வி, ரோட்டரி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா துறைகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 638க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு போலியோ சொட்டு மருந்துகளை குறிப்பிட்ட குளிர்பதன நிலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு சொட்டு மருந்து மையத்திலும் இப்பணிக்கு 4 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு மையங்களுக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விடுபட்ட குழந்தைகள் யாரேனும் இருப்பின் இன்று (திங்கட்கிழமை) மேற்கண்ட பணியாளர்கள் இரு குழுக்களாக பிரிந்து வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க உள்ளனர் என்றார். கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒன்றியக்குழு தலைவர் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நேற்று ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி ஒன்றியக்குழு தலைவர் ரெத்தினவேல் (எ) கார்த்திக் துவக்கி வைத்தார். முகாமில் மருத்துவர் நர்மதா, அட்மா இயக்குநர் தமிழழகன், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் அருண்பிரசாத், விராலிப்பட்டி முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கந்தர்வகோட்டை பேருந்து நிலையம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஊராட்சி மன்ற தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் என பல இடங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் நடைபெற்றது. முகாம்களில் ஐந்து வயதிக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டனர். காலை முதல் மாலை வரையும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

Tags : camp ,centers ,Pudukkottai ,
× RELATED பாகிஸ்தானில் போலியோ மருந்து முகாம்...