×

மாநில அளவிலான கராத்தே புதிய வாக்காளராக சேர 54 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு

மதுரை, ஜன. 20:  மதுரை மாவட்டத்தில் புதிய வாக்காளராக சேர 54 ஆயிரத்து 384 பேர்  விண்ணப்பித்துள்ளனர். வரும் 22ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச.23ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஆண்கள் 12 லட்சத்து 76 ஆயிரத்து 784 பேர், பெண்கள் 13 லட்சத்து 12 ஆயிரத்து 40 பேர், மூன்றாம் பாலினம் 157 பேர் என மொத்தம் 25 லட்சத்து 88 ஆயிரத்து 981 வாக்காளர்கள் உள்ளனர்.  2020 ஜன.1ம் தேதியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் புதிய வாக்காளராக சேரலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் சேராதவர்களும், உரிய ஆவணம் கொடுத்து வாக்காளர் பட்டியலில் சேர  முதற்கட்டமாக கடந்த 4 மற்றும் 5 தேதிகளும், இரண்டாவது கட்டமாக 11 மற்றும் 12ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது.

இம்முகாம் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 2,716 வாக்குச்சாவடிகளில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 18 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேராதவர்கள் இந்த இரண்டு முகாமிலும் விண்ணப்பித்தனர். புதிய வாக்காளராக சேர்க்க கோரி, படிவம்-6ஐ 54 ஆயிரத்து 384 பேர் கொடுத்தனர். பெயர் நீக்க கோரி, படிவம்-7ஐ 5 ஆயிரத்து 241 பேரும், பெயர், முகவரி திருத்தம் கோரி படிவம்-8ஐ 2 ஆயிரத்து 840 பேரும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றித்தரக்கோரி 3 ஆயிரத்து 222 பேரும் விண்ணப்பித்தனர். மொத்தம் 65 ஆயிரத்து 687 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வரும் 22ம் தேதி கடைசி நாளாகும்.
 இந்த மனுக்கள் அனைத்தும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, மனு மீது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் பரிந்துரையின் பேரில், தேர்தல் அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பார்கள்.

மேலும் வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள், வாக்குச்சாவடி மையம், அரசு அலுவலகத்தில் தேசிய வாக்காளர் உறுதிமொழி எடுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளி, கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. புதிதாக பெறப்பட்ட மனுக்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இவ்வாண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14ம் தேதி வெளியிடப்படும்.

Tags : karate voter ,
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு