தா.பழூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது

தா.பழூர், ஜன.20: தா.பழூர், புரந்தான் பகுதிகளில் நெல் அறுவடை பணி துவங்கியதால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூரை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் பொன்னாற்று பாசனம் மற்றும் மோட்டார் மூலமும் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். தற்பொழுது அனைத்து பகுதிகளிலும் நெல் அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில் அறுவடை இயந்திரங்கள் மூலம் துவங்கியுள்ளது. அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் உள்ள நிலத்தில் அறுவடை செய்யும் விவசாயி மாணிக்கவேல் கூறும்போது, இந்த வருடம் நெல் விளைச்சல் அதிகமாக இல்லை என்றாலும் போதுமான அளவு விளைந்திருக்கிறது. விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்ததாலும் அவ்வப்போது மழைப்பொழிவு இருந்ததாலும், விவசாயம் சிறப்பாக செய்ய முடிந்தது. தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. அதுபோல் அரசு இந்த வருடம் நெல்லுக்கான விலை நிர்ணயத்தை இதுவரை அறிவிக்கவில்லை. தற்போது அறுவடை துவங்கிய நிலையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததால் அறுவடை செய்யும் நெல்லை பாதுகாத்து வைப்பது என்பது சிரமமான காரியமாக உள்ளது.

அவ்வப்போது பொழியும் மழையின் காரணமாகவும், அதிகப்படியான பனியின் காரணமாகவும் நெல் ஈர தன்மையிலேயே இருக்கும். இதனால் இதை காய வைத்து விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளோம். ஆனால் அரசு முன்கூட்டியே இந்த கொள்முதல் நிலையங்களை திறந்து இருந்தால் நேரடியாக கொள்முதல் நிலையங்களில் கொண்டு நெல்களை விற்பனைக்கு தயார் செய்து இருப்போம். தற்பொழுது இந்த நெல்களை பாதுகாத்து வைக்க இயலாததாலும், அரசு கொள்முதல் நிலையம் திறக்காததால் இடைத்தரகர்கள் வியாபாரிகளிடம் குறைவான விலைக்கு விற்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது என்றார். தற்போது விளைவிக்க பட்டிருக்கும் நெல்லுக்கு அரசானது விலை நிர்ணயம் செய்யும் பொழுது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயிகள் உரங்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

அதுபோல அதிக மழை பொழிவால் பூச்சி தாக்கத்திற்கு அதிகப்படியாக மருந்துகளும் தெளிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 18 ஆயிரம் செலவு செய்த காலத்திலும் 72 கிலோ மூட்டை 1150 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்து உள்ளனர். உரம், மருந்து, ஆள் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டும் தற்பொழுது உள்ள விளைவாசிகளையும் கருத்தில் கொண்டு நெல்லுக்கான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்த 3 வருடங்களில் நெல் கொள்முதல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யவில்லை. தற்பொழுது உள்ள இளைஞர்கள் விவசாயத்தை ஆர்வமுடன் கையில் எடுத்து செய்ய இதுபோன்ற உற்பத்தி பொருளுக்கு அரசு லாபகரமான விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே படித்த இளைஞர்கள் விவசாயத்தை நம்பி விவசாயம் செய்ய முன் வருவார்கள் என்று கூறினார். தா.பழூர் பகுதியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Paddy harvesting ,
× RELATED உடுமலை பகுதியில் நெல் அறுவடைக்கு இயந்திரம் கிடைக்காமல் தட்டுப்பாடு