×

அளக்குடி-காட்டூர் செல்லும் ஆற்றங்கரை சாலையோரம் உள்ள முள்மரங்களை அகற்ற கோரிக்கை

கொள்ளிடம், ஜன.20: கொள்ளிடம் அருகே அளக்குடியிலிருந்து காட்டூர் செல்லும் ஆற்றங்கரை சாலையை சூழ்ந்துள்ள சீமைக்கருவேல முட்செடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்திலிருந்து காட்டூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையின் இருபுறங்களிலும், சீமைகருவேல முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து, சாலையை மூடிக் கொண்டுள்ளது. சாலையை மூடியிருப்பதால், சாலை ஒத்தையடி பாதையாக மாறியுள்ளது. இந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சைக்கிள் மற்றும் பைக் போன்ற இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் மிகுந்த சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். சைக்கிள்களில் செல்லும் பள்ளி மாணவர்கள் இந்த சாலையின் வழியே செல்லும்போது சீமைக்கருவேல முட்செடிகள் எதிர்பாராதவிதமாக உடலில் படும்போது சட்டை கிழிவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் இந்த முட்செடிகள் உடலில் உரசுவதால் காயம் ஏற்படுகிறது. இந்த சாலையில் அடர்ந்து வளர்ந்துள்ள இந்த முட்செடிகளை கடந்த சில மாதங்களாக வெட்டி அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அளக்குடியிலிருந்து காட்டூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : removal ,river bank ,Alakudi ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...