×

நாகூர், வேளாங்கண்ணியில் இருந்து பழனிக்கு ரயில் இயக்க வேண்டும் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

நாகை,ஜன.20: வழிபாட்டு தலங்களை இணைக்கும் வகையில் நாகூர், வேளாங்கண்ணியில் இருந்து பழனிக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்று நாகூர், நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாகை ரயில்வே நிலையத்திற்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட முதன்மை இயக்குதல் மற்றும் ரயில் போக்குவரத்து மேலாளர் நீனு இட்டரியா வந்தார். அப்போது நாகூர் -நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்கம் சார்பில் தலைவர் மோகன், செயலாளர் சித்திக், துணை தலைவர் தாஹா, துணை செயலாளர்கள் முகமதுதம்பி மற்றும் கோபிகுமார் ஆகியோர் சந்தித்தனர் மனு கொடுத்தனர்.

இதில் கோவை -காரைக்கால்- கோவை இடையே பகலில் அதிவேக விரைவு ரயில் பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, நாகை, நாகூர் வழியாக இயக்க வேண்டும். தற்போது திருச்சியில் இருந்து பழனி அல்லது பொள்ளாச்சிக்கு ரயில்பாதை இருந்தும் ஒரு ரயில் கூட இயங்கவில்லை. எனவே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை திருவாரூர், நாகை மாவட்ட பக்தர்கள் பழனி செல்ல கஷ்டம் அடைகின்றனர். காரைக்கால் -அஜ்மீர் இடையே வாரமிருமுறை விரைவு ரயில் இயக்க வேண்டும். நாகூர் கந்தூரி உற்சவம் வரும் ஜனவரி 26ம் தேதி தொடங்கி பிப்ரவரி முதல் வாரம் முடிவடைகிறது. எனவே சென்னை- காரைக்கால்-சென்னை இடையேயும், காரைக்கால் -திருநெல்வேலி- காரைக்கால் இடையேயும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Railway Users Association ,Nagore ,Palani ,Velankanni ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது